விதைத்தது முளைக்கும்!

சின்னஞ் சிறிய வயதினிலே
நம்முள் விதைக்கும்
ஆசை விதை
ஆண்டுகள் பலவாய்
ஆனாலும்
ஆல்போல் தழைத்து
வளர்ந்திடுமே!
அதற்குச் சான்று என்
அமெரிக்கப் பயணம்!!!

நாலாம் வகுப்பில்
படிக்கையிலே
நானும் வரைந்தேன்
உலக மேப்பை!
ஏனோ என்னுள்
ஓர் ஏக்கம்
எப்படியும் அமெரிக்காவைப்
பார்க்கணும்னு!!!

கூடப் படித்த நண்பர்களிடம்
இதனைக் கூறிய உடனேயே
நக்கல்,நையாண்டி,
லொள்ளு சபாவை
பெரிதாய்ச் செய்து
சிரித்தார்கள்!!!

ஐம்பதுக்கு
ஐம்பது என
அதிகம் மார்க்குகள்
வாங்காமல்
ஐம்பதுக்கு
ஐம்பது என
அடிமட்ட ரேங்க்கை
வாங்கும் நீயா
அமெரிக்காவைப்
பார்த்திடுவாய்?
என்றே சவாலை
விட்டார்கள்!!!

சூடு, சொரணை
அதனால்தான்
என்னுள் பொங்கி
எழுந்ததனால்
நானும் படித்து முன்னேறி
நயம்மிகு பட்டங்கள்
பல பெற்றேன்!

தேவகோட்டை
நகரினிலே
சிறந்த சேவுகன்
அண்ணாமலையார்
அமைத்த
கலைக்
கல்லூரியிலே
தமிழ்ப் பேராசியர்
ஆனேன் நான்!
அதனால் பூத்ததே
புது வசந்தம்!!!

பணியில் ஓய்வு பெற்றதுமே
பறந்தேன் மலேசியா
சிங்கப்பூருக்கு!
அணியணியாக
இலங்கைக்கும்
துபாய்,தாய்லாந்துக்கும்
சென்று மகிழ்ந்தேன்!

அமெரிக்கப் பயணம்
மட்டும்தான்
கைகூடத் தாமதம்
ஆனதனால்
சிவபுராணம்
தினம் பாடிச்
சிவபெருமானுக்குப்
போன் போட்டேன்!

“கவலைப்படாதே
தேனப்பா!
காலம் கனிந்து
வருகிறது!!
பேத்தி கோதை
பிரசவத்திற்கு
உதவச் சென்று
அமெரிக்கா பார்!”
என்றே இறைவன்
சொன்னபடி
எழிலாய் அமைந்தது
இப் பயணம்!!!

பேத்தியின் கணவர்
சேதுராமும்
எங்கள் மாப்பிள்ளை
முருகனுமாய்
ஆச்சி மகனாம்
பாலாஜியுடன்
ஆலோசனை செய்து
திட்டமிட்டார்!!!

சிகாகோவில் இறங்கியதும்
கோயில்களுக்குக்
கூட்டிச் சென்றார்!
நியூ யார்க் நகரும்
நியூ ஜெர்சியும்
பாலாஜி உவியால்
மின்னக் கண்டோம்!

சுதந்திர தேவி
சிலையைக் காணச்
சிறியதோர் கப்பலில்
அழைத்துச் சென்றார்!
பின்லேடன் நொறுக்கிய
ரெட்டைக் கோபுரம்
இன்று
பீனிக்ஸ் பறவை போல்
உயர்ந்துள்ளது!

நியூ ஜெர்சியிலே
அமைந்துள்ள
பாலாஜி வீடு
திருப்பதியே!
சகல வசதிகளும்
அமைந்துள்ளதால்
அவன்
சம்சாரம்
வனஜாவின்
சமையலும் சூப்பர்!!!

இன்பம் பொங்கி
வழிகின்ற
இனிய நயகராவின் அழகெல்லாம்
மாப்பிள்ளை முருகன்
துணையாலே
வண்ணமயமாய்
இனித்ததுவே!

கொலம்பஸ் நகரில்
கோலோச்சும்
டாக்டர் காசிராஜன்
அவர்களது
அரண்மனை வீடே
ஆனந்தம்!
அதனினும் மேல் அவர்கள்
மனைவி
உபசரிப்பு!

உலகில் உயர்ந்த
நான்கு கார்களில்
சுற்றியுள்ள ஊர்களெல்லாம்
எம்மைக் காணச்
செய்தார்கள்!
என் சொற்பொழிவிற்கும்
ஏற்பாடு செய்தார்!

மின்னல் வேகம்
அவர் மனைவி
சிந்தாமணி எனும்
ஆச்சி எம்மைப்
பல்வேறு கோயிலுக்கும்
அழைத்துச் சென்று
பெரும் புண்ணியத்தை
அள்ளிக்கொண்டார்!

சிகாகோ நகருக்கு
மீண்டும் வந்து
நூற்றி மூன்று மாடிகளை
ஒரே நிமிடத்தில்
ஏறிப் பார்த்தது
எம்மாம் பெரிய
மூச்சு விட்டோம்!!!
எங்கும் சிற்றெரும்புக்
கட்டிடங்கள்!!!

விவேகானந்தர்
புகழ் பாடும்
கீர்த்தி மிகுந்த
நல்லிடத்தில்
உலகின் முதல்தர
அருங்காட்சியகத்தை
ஓவியமாக
அமைத்துள்ளார்!

எல்லா நாட்டுச்
சிற்பங்களும்
எழில் குலுங்கவே
அமைந்திருந்தும்
இந்துக் கடவுள்
சிற்பங்களையே
எல்லோரும்
வியந்து
பாராட்டினார்!!!

அக்சர்தாம் எனும்
கோயிலிலே
ஆயிரக் கணக்காய்ச்
சிற்பங்கள்
அருளை வழங்கும்
அழகுடனே
அதிமதுரமாய்த்
தித்தித்ததே!!!

வணிக வளாகம்
அத்தனையும்
வகைவகையாகக்
காட்டி வந்த
சேதுராமின் பெருமையினைச்
சொல்லால் அளக்க
முடியாது!

சுற்றுலா அனைத்தும்
முடியும் வரை
பொறுமை காத்தாள்
பேத்தி கோதை!
பயணம் யாவும்
நிறைந்தவுடன்
பெற்றாள் மகளை
இனிதாக!

நவநீதம் எனும்
மாமியார் பேரை
நவா எனவே
அழகொளிரச்
சூட்டி மகிழ்ந்தார்
சுகம் தொடர!
சூப்பர் உதவி
மகள் தெய்வா!!!

ரெங்கநாயகி
சுந்தரம் எனும்
சேவை மனப்பான்மை
மிக்கவர்கள்
அடிக்கடி வந்து
உதவுவதால்
ஆனந்தம் என்றும்
மலர்கிறது!

கொள்ளுப் பாட்டி
வள்ளிக் கண்ணு
குளிர் நிலவாக
உதவுவதால்
பேத்தி கோதைக்கு
சந்தோஷம்!
அதனால் சேதுராம்
மகிழ்கின்றார்!!!

டிராவல் ஏஜென்சி
மூலம் நான்
அமெரிக்க சுற்றுலா
வந்திருந்தால்
இவ்வ்வ்வளவு மகிழ்ச்சி
கிடைக்காது!
முழுமை இன்பம்
அமையாது!!!

எல்லாம் வல்ல
இறைவன் அருள்
இனிய சுற்றத்தாரின்
பேருதவி
எல்லாம் சேர்ந்து இப்
பயணத்தை
இமாலய வெற்றி
பெறச் செய்ததே!!!

நன்றி மலர்களை
அவர்களுக்கு
அர்ப்பணிப்பதுவே
பேரின்பம்!
வளரும் தலைமுறைக்கு
ஓர் செய்தி!
வளமாய்ப் படித்தால்
வரம் கிடைக்கும்!!!

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started